171. அருள்மிகு சற்குணநாதேஸ்வரர் கோயில்
இறைவன் சற்குணநாதேஸ்வரர்
இறைவி மங்கள நாயகி
தீர்த்தம் சீதபுஷ்கரணி, பிரம்ம தீர்த்தம்
தல விருட்சம் வில்வம்
பதிகம் திருஞானசம்பந்தர்
தல இருப்பிடம் திருஇடும்பாவனம், தமிழ்நாடு
வழிகாட்டி திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் இருந்து வேதாரண்யம் செல்லும் சாலையில் 12 கி.மீ தொலைவு சென்று தில்லை விளாகம் கடந்து இடும்பாவனம் அடைந்தவுடன் வலதுபுற தெருவில் திரும்பி சுமார் 1 கி.மீ. தொலைவு சென்றால் இக்கோயிலை அடையலாம். திருத்துறைபூண்டியிலிருந்து 18 கி.மீ.
தலச்சிறப்பு

Idumbavanam Gopuramஅரக்கர்களான இடும்பனும், இடும்பியும், இத்தலத்திற்கு வந்து இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வழிபட்ட தலமாதலால் 'இடும்பாவனம்' என்னும் பெயர் பெற்றது. இதன்பிறகே இடும்பி பீமனைத் திருமணம் புரிந்துக் கொண்டாள். அதற்கு முன் இத்தலம் 'வில்வாரண்யம்' என்று வழங்கப்பட்டது.

இத்தலத்து மூலவர் 'சற்குணநாதேஸ்வரர்' அழகிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். மூலவருக்குப் பின்புறம் சுவாமியும், அம்பாளும் திருமணக் கோலத்துடன் காட்சி தருகின்றனர். அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டியருளிய தலம். இத்தகைய திருக்கோலம் வேதாரண்யம், திருநல்லூர், திருவேற்காடு ஆகிய தலங்களிலும் உண்டு. அம்பிகை 'மங்கள நாயகி' என்னும் திருநாமத்துடன் காட்சி தருகின்றாள்.

Idumbavanam AmmanIdumbavanam Moolavarகோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் காட்சி தருகின்றனர். உள்பிரகாரத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான், சிவகாம சுந்தரி உடனுறை நடராஜர், பைரவர், கஜலட்சுமி, அகத்தியர், இடும்பை, சனி பகவான், சூரியன், சந்திரன் ஆகிய சன்னதிகள் உள்ளன. தல விநாயகர் வெண்மை நிறத்தில் உள்ளதால் 'வெள்ளை விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார்.

வேதாரண்யத்தில் வழிபட்டபின் இத்தலத்திற்கு திருஞானசம்பந்தர் வந்தபோது இத்தலத்தில் உள்ள மண் எல்லாம் சிவலிங்கமாகத் தோன்றின. அதனால் கோயிலினுள் உள்ளே செல்லாமல் வெளியிலேயே தங்க, சிவபெருமான் சம்பந்தர் கனவில் தோன்றி கோயிலுக்குள் வருமாறு பணித்து, பதிகம் பெற்றதாகத் தலவரலாறு கூறுகிறது.

ஸ்ரீராமபிரான், பிரம்மா, அகத்தியர், எமதர்மன், பஞ்ச பாண்டவர்கள், இடும்பன், இடும்பி, சேக்கிழார், இராமலிங்க சுவாமிகள் ஆகியோர் வழிபட்ட தலம்.

இத்தலத்திற்கு அருகில் உள்ள தில்லை விளாகம் கோயிலில் உள்ள நடராஜர் மூர்த்தி விசேஷம்.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com